எச்சரிக்கை

எச்சரிக்கை

Friday 24 April 2015

காலடிச் சங்கரர் காலடி பணி

நெறிகளும் விதிகளும் நூல்களாய்ச் சங்கமித்த
நால்வேத முழுப்பொருள் நன்குணர் நல்லோன்
உபநிடதப் புதையலின் உறைவிடமே சத்குருவே
மாசற்ற உம்பாதம் பணிகின்றேன் சங்கரரே.

கருணைப் பெருங்கடலே கட்டுக்கள் மிகுந்திட்ட
பிறப்பிறப்புச் சுழலிதிலே பிறந்துழலும் மனம்மாற்ற
மெய்யின் தத்துவங்கள் முழுதுணர்ந்த பெரியோனே
பொற்பாதம் மனதாரப் பணிகின்றேன் சங்கரரே



உம்மாலே யாவரும் உவகையை உணர்ந்தனரே
ஆத்மனை அறிவதிலும் ஆற்றலோ வேல்போலே
இறையை ஆத்மனை உணர்த்திடுவீர் சத்குருவே
பாதத்தில் சிரமிருத்திப் பணிகின்றேன் சங்கரரே

ஈசனவன் திருவுருவே ஈரமிக்க மனத்திருவே
உமைக்காண என்னுள்ளம் ஆனந்தக் களியாடும்
மாயையில் அலையாடும் மனத்தைத் தேற்றிடுவீர்
நும்பாதத் தாமரைகள் பணிகின்றேன் சங்கரரே

தவமியற்றி ஆன்மத்தை உணர்வதுவே என்னிலக்கு
உம்மருளால் ஆன்மத்தை உணரவே அருளிடுவீர்
கதியற்ற என்னனையர் நும்காப்பில் நலம்வாழ
பொன்னடியில் தலைவைத்துப் பணிகின்றேன் சங்கரரே

உலகத்தை உய்விக்க வெவ்வேறு பாவனையில்
உள்ளத்தை வென்றிட்ட உம்சீடர் உலவிடுவார்
கதிரொளியின் கருணைக் கண்ணுடைக் குருநாதா
பொற்பாதம் சரணென்று பணிகின்றேன் சங்கரரே





இடபம் கொடியாக்கி இமயம் குடிகொண்ட
யோகியர் பணிந்தேத்தும் ஈசனவன் தோன்றலே
சிரங்குவிவார் உய்த்தேத்தும் ஸ்ரீகுருவே உமது
தாமரைப் பாதங்கள் சரணடைந்தேன் சங்கரரே

ஆயகலை ஞானநிலை அணுவளவும் அறியவில்லை
கல்வியோ செல்வமோ சிறிதேனும் எனக்கில்லை
கருணைத் திருவுருவே எனக்கும் அருளீரே
காலடியில் பணிகின்றேன் காலடியின் சங்கரரே!

-பார்வதேயன்.

தோடகாஷ்டகத்தைப் படித்துக் கருத்தை உள்வாங்கிக் குருவருளால் எழுதியது. பெருமைகள் குருவின் பாதங்களில் அர்ப்பணம். பிழைகள் இருப்பின் அவை என் புரிதற்குறைபாட்டால் விளைந்தவை.

No comments:

Post a Comment